computer information

15/07/2010 12:59

ஸ்பைவேர் - ஆட்வேர் தடுப்பது எப்படி ?

 

பல வாசகர்களைப் பயமுறுத்தும் விஷயங்கள் பட்டியலில், அதிகம் கவலைக்குள்ளாக்குவது ஸ்பைவேர், ஆட்வேர், மால்வேர் எனக் குறிப்பிடப் படும் தொகுப்புகளே.  இவை இன்டர்நெட் வழியாக, கம்ப்யூட்டர் உள்ளே வருவது நிச்சயமாகிவிட்ட ஒரு உண்மையாகும். ஆனால், இவை உள்ளே உள்ளனவா என்று தெரியாமலேயே நாம் இவை குறித்து அச்சம் கொண்டிருப்பது தான், கூடுதல் கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. பல வாசகர் கடிதங்களில் இந்த அச்சம் புலப்படுகிறது. எந்த விஷயமானாலும், இன்டர்நெட் வழி தான் என்று ஆகிவிட்ட நிலையில், இது போன்ற ஆபத்துக் களிலிருந்து கூடுமானவரை பாதுகாப்பதற்குரிய வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அவை குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம். 
1. ஸ்பைவேர் தடுப்பு: நீங்கள் ஏற்கனவே இதனைச் செய்திராவிட்டால், உடனே மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு இதுவாகும். உடனடியாக ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம்   (spyware blocker)  ஒன்றை நிறுவுங்கள். இங்கு குறிப்பிடப்படுவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல. ஸ்பைவேர் என்பது வைரஸ் அல்ல. பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஸ்பைவேர் புரோகிராம்களைத் தடுப்பதில்லை. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்பைவேர்களைத் தடுக்கும் புரோகிராம்களையும் நாம் இன்ஸ்டால் செய்திட வேண்டும். செக்யூரிட்டி சூட் (Security Suite)  என்று சொல்லபடுகிற தொகுப்புகளில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் மற்றும் பயர்வால் சேர்ந்தே கிடைக்கின்றன. ஆனால் இந்தவகை தொகுப்பு புரோகிராமினால், உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகிறது என்றால், தனித்தனியே ஒவ்வொரு தடுப்பிற்கும்,தனி புரோகிராமினை நிறுவலாம்.
2. பயர்வால்: மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பயர்வால் தடுப்பு ஒன்றினைத் தருவது ஒரு நல்ல முயற்சியாகும். ஆனால், கூடுதல் வசதிகள் கொண்ட, சிறப்பாகச் செயல்படும் பயர் வால்கள் சில உள்ளன.  அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு பயர்வால், உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்கள் அனுமதி இன்றி, அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே நுழையும் எதனையும், அது ஸ்பைவேர், வைரஸ், மால்வேர், ஹேக்கர் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றைத் தடுக்கிறது. பயர்வால் செட்டிங்ஸ் சில வேளைகளில் குழப்புவது போல் இருக்கும். எனவே தெளிவடைந்த பின்னரே, அதனை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். பயர்வால் அமைத்த பின்னர், அவை சரியாக உள்ளனவா என்று அறிய நீங்கள் Hackerwatch.org/ Malwarehelp.org என்ற இரண்டு தளங்களின் உதவியை நாடலாம். 
3. அப்டேட், அப்டேட்: உங்களுடைய செக்யூரிட்டி சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டால் தான், திடீர் திடீரென உருவாக்கப்பட்டு வரும் கெடுதல் அளிக்கும் புரோகிராம்களைத் தடுக்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ், செக்யூரிட்டி அப்டேட்ஸ், பேட்ச்சஸ், டெபனிஷன்ஸ், உங்களுடைய பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் ஆகிய அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும்.
4. பாதுகாப்பான இன்டர்நெட் பயணம்: இன்டர்நெட் பிரவுஸ் செய்வது, இப்போதெல்லாம் ஊர்ந்து, பறந்து, பாய்ந்து செல்லும் ஜீவராசிகள் வாழும் காட்டின் நடுவே  நடந்து செல்வது போல ஆகிவிட்டது. எந்த நேரத்தில் எந்த வைரஸ் அல்லது மால்வேர் வந்து நம்மைத் தாக்கும் என்று நமக்குத் தெரியாது. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நாம் இவற்றைத் தடுக்கலாம். இணைய தளங்களில் எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம். 25 நாளில் 25 கிலோ எடை குறைய, இங்கே கிளிக் செய்திடுக என்று உங்களைத் தூண்டும் வாசகம் இருக்கும். அதிலிருந்து ஓடிவிடுங்கள். பிரபலமான சினிமா நடிகை குறித்த சுவராஸ்யமான தகவல் குறித்து அறிவிப்பு இருக்கும். அலட்சியப்படுத்துங்கள். பாப் அப் விண்டோ எழுந்து வருகிறதா? அதில் இது போன்ற செய்தி உள்ளது. உடனே அதில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து, அதனை மூட முயற்சிக்காதீர்கள். அதில் கிளிக் செய்தால் கூட, அது ஆக்டோபஸ் போல உங்களை இழுத்துக் கொண்டு நாசப்படுத்தும். அதுதானே அப்போதைக்கு ஆக்டிவ் விண்டோ. எனவே ஆல்ட்+ எப்4 அழுத்துங்கள். அது உடனே மூடப்படும். 
இதே போலத்தான் இமெயில் செய்திகள் கொண்டு வரும் லிங்க்குகளும். எதனையும் தொட வேண்டாம். அதில் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது உங்களை இழுத்துச் செல்ல இருக்கும் தளத்தின் முகவரி காட்டப்படும். அதனைப் பார்த்தே, அந்த தளம் உண்மையானதா என்று தெரியவரும். 
5. புரோகிராம் இன்ஸ்டலேஷன்: பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறித்துத் தெரிந்து கொண்டு, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்கிறோம். அவற்றை இன்ஸ்டால் செய்திடும் முன், அதில் தரப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படித்துவிடுங்கள். சில சிறிய அளவான எழுத்துக்களில், உங்கள்  பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கான தகவல் இருக்கும். 
6. யூசர் ஐ.டி. திருட்டு: நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுவது, இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே யூசர் நேம் கூடுமானவரை குழப்பமானதாகவே இருக்கட்டும். அதே போல பாஸ்வேர்டுகளும், யாரும் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கட்டும். 

நல்ல ஸ்பைவேர் தடுக்கும் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், சரியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அடிக்கடி அப்டேட்டிங் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தால், நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பாதுகாப்பானது என்ற நல்ல நம்பிக்கையுடன் செயல்படலாம் 

Share |